இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களுடனான உயர்நிலைச் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் பிரதேச ஆளுகை சார்ந்த முக்கிய சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு நீடித்த மற்றும் நீதியான அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்திய பிரதிநிதிகள், அரசியலமைப்பின் அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
மேலும், தமிழர் தாயகப் பகுதிகளில் காணப்படும் காணிப் பிரச்சினைகள், அபிவிருத்திச் சவால்கள், தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், மக்களின் அன்றாட வாழ்வாதாரச் சிக்கல்கள், பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக ஆளுகையை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கைத் தமிழ் மக்களின் நலன், அரசியல் உரிமைகள் மற்றும் கண்ணியமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் என்பதை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்கள் இதன்போது மறுவுறுதி செய்தார்.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் மதிக்கப்பட்டு, நீடித்த சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படுவதற்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வு விரைவில் எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என இச்சந்திப்பின் நிறைவில் சுட்டிக்காட்டப்பட்டது.





