யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவர் ஒருவர், அங்கு கற்ற முன்னாள் மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர்களின் அனுமதியின்றி பதிவுசெய்து, சமூக ஊடகங்கள் வழியாக தவறான முறையில் பகிர்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உயர்தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவர், தனது நண்பர்கள் அடங்கிய ‘WhatsApp’ குழுவொன்றில் இவ்வாறான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அத்துடன், அந்த குழுவிலிருந்த ஏனைய மாணவர்களும் பிற மாணவிகளின் புகைப்படங்களை இதேபோன்று தவறாகப் பயன்படுத்திப் பகிர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அறிந்த மற்றொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், சம்பந்தப்பட்ட 17 வயது மாணவரைத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்குள்ளான மாணவரின் தந்தை இது குறித்து ஏனைய மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரித்தபோதே, இந்த புகைப்பட விவகாரம் பெற்றோரின் கவனத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தற்போது சம்பந்தப்பட்ட மாணவிகளின் பாடசாலைகளிலும், குறித்த தனியார் கல்வி நிலையத்திலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் சிறுமிகள் என்பதால், அவர்களின் புகைப்படங்கள் அல்லது அடையாளங்களைப் பகிர்வது சட்டரீதியாகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இக் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு:
- அனுமதியின்றி எடுக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மீண்டும் பகிர வேண்டாம்.
- அவ்வாறான உள்ளடக்கங்கள் உங்களது கைபேசிக்குக் கிடைத்தால், அதை மற்றவர்களுக்கு அனுப்பாமல் ஆதாரங்களைப் பாதுகாத்து உடனடியாக உரிய அதிகாரிகளிடம் முறையிடவும்.
- ஒருவரின் தனியுரிமையை மீறுவது வேடிக்கையான செயலல்ல; குறிப்பாகச் சிறார்களின் படங்களை தவறாகப் பயன்படுத்துவது கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்கும் தீவிர குற்றமாகும்.




