இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கி, பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் 7 அதிநவீன தாழ்தள (Low-floor) பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இப்பேருந்துகள், நேற்று (02) ‘Metro Bus’ சேவையாக இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா (Akio Isomata) இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேருந்துகளை உத்தியோகபூர்வமாக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதோடு, பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றிப் பயணிப்பதற்கு இந்த தாழ்தள ‘Metro Bus’ சேவை பெரிதும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




