மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்குளம் தர்மபுரம் கடற்கரையில் அமைந்துள்ள மீன்பிடி வாடி ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த பகுதியில் உள்ள மீனவ வாடியில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட உள்ளூர் மீனவர்கள் உடனடியாக இது குறித்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், அது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் மற்றும் அவரது இறப்பிற்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது குறித்தும் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சடலத்தை சட்டமருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கும், நீதிவான் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





