அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்ட எலான் மஸ்க்கிற்கு, எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தனிநபர் ஒரு தேர்தல் சுழற்சிக்காகச் செலவிட்ட மிக அதிகபட்ச தொகையாக இது பதிவாகியுள்ளது. எனினும், மஸ்க்கின் இந்த பிரம்மாண்ட நிதி ஆதரவையும் மீறி, பல முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி கணிசமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக, டெக்சாஸ் மாநில செனட் ஆசனத்திற்கான போட்டியில் குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனை, ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தலாரிக்கோ தோற்கடித்துள்ளார். பாக்ஸ்டனின் பிரசாரத்திற்காக மட்டும் எலான் மஸ்க் குறைந்தது 45 மில்லியன் டொலர்களைச் செலவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர அரிசோனா, மிச்சிகன், விஸ்கொன்சின் மற்றும் மின்னசோட்டா ஆகிய மாநிலங்களிலும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு மஸ்க் பெருமளவில் நிதியுதவி வழங்கியிருந்தார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லா (Tesla) நிறுவனங்களின் எதிர்காலச் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அரசாங்க ஒப்பந்தங்கள், தேசிய பாதுகாப்புத் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் மஸ்க்கின் நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் அரசியல் சார்ந்த பதிவுகளைக் குறைத்துக்கொண்டு, தனது xAI நிறுவனம் உருவாக்கிய ‘GrokBot’ தொடர்பான தொழில்நுட்பப் பதிவுகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
இதனிடையே, தேர்தல் முடிவுகளின் பின்னடைவால் பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதமும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.4 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளதாக சர்வதேசப் பொருளாதார ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.




