கிண்ணியா பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மகாவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான விசேட அதிரடிப்படை (STF) வீரர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த அதிகாரி பத்தரமுல்ல, ஜயவத்தனகம பகுதியைச் சேர்ந்த சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த 39 வயதுடைய பொலிஸ் சார்ஜன் சாந்த கிஹான் ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று (ஜூலை 13) அதிகாலை வேளையில், கிண்ணியா முடுக்குத்தெட்டி மற்றும் மணலாறு துறையினூடாக மகாவலி ஆற்றைக் கடந்து, சட்டவிரோத மணல் கடத்தல் குழுவொன்றை வளைத்துப்பிடிப்பதற்கு விசேட அதிரடிப்படை வீரர்கள் முயன்றுள்ளனர். இதன்போது, ஆற்றில் காணப்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக குறித்த அதிகாரி துரதிர்ஷ்டவசமாக ஆற்று நீரினுள் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதிகாரி மாயமானதைத் தொடர்ந்து, கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை முதல் ஆற்றுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர். இதன் பலனாக, சேருநுவர – திட்டன்தெட்டி மணல் துறைப் பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமது கடமையை நிறைவேற்றச் சென்றபோது விசேட அதிரடிப்படை வீரர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




