நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) ஏற்பாட்டில் சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச் செயற்றிட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” எனும் மகுடத்தின் கீழ், 2026 ஜூலை 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கல்முனை ஆசாத் பிளாசா மண்டபத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற சுகாதார அமைச்சுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய தலைவர் ரவூப் ஹக்கீம், “டெங்கு அபாயத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க சமூக மட்ட செயல்பாடுகள் மிக அவசியமாகும். உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் கீழ்மட்டச் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, அம்பாறை மாவட்டம் தொடங்கி கிழக்கு மாகாணத்தின் ஏனைய இரண்டு மாவட்டங்களிலும் இச்செயற்றிட்டம் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப வழிகாட்டலும் மக்கள் பங்களிப்பும்
இச்செயற்றிட்டமானது, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்களின் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் முறையான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிராந்திய சுகாதார அதிகாரிகள் மற்றும் இளைஞர் அமைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளையும் பங்களிப்பையும் வழங்கினர்.




