• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

– பாறுக் ஷிஹான் –

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் வழிகாட்டலில், குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

எனினும், குறித்த சந்திப்பின் போது, நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி முஅஸ்ஸம் ஊடகங்களிடம் பேசுகையில்;

“நாளை அல்லது நாளை மறுதினம், குறித்த அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறித்தல் நோட்டீஸ்கள்  அனுப்பப்படும் என எதிர்பார்கிறோம். அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும், விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் நம்புகிறோம்” என்றார். ’

இதன்போது சட்டத்தரணி முஅஸ்ஸமுடன் சட்டத்தரணி ருடானி சாஹிரும் பிரசன்னமாகியிருந்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இவ்விடயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்  மனுவைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share the Post: