கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில், உரிமையாளர் எவருமின்றி கைவிடப்பட்டிருந்த 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் நேற்று (17.07.2026) அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
விமான நிலைய வருகை முனையத்திலுள்ள லக்கேஜ் பெல்ட் (Luggage Belt) பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைவிடப்பட்டிருந்த 4 பயணப் பொதிகளை (Suitcases) சோதனையிட்ட போதே இந்த பெருந்தொகையான சிகரெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
துபாய் விமானம் மூலம் கடத்தல்?
நேற்று காலை 08:45 மணியளவில் துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் இந்த சிகரெட் பொதிகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 4 பயணப் பொதிகளையும் திறந்து சோதனையிட்ட போது, அவற்றுள் வெளிநாட்டு தயாரிப்பான புகழ்பெற்ற “மென்செஸ்டர்” (Manchester) ரகத்தைச் சேர்ந்த 376 சிகரெட் கார்ட்டன்கள் (Cartons) இருந்தன. இவற்றில் மொத்தம் 75,200 சிகரெட்டுகள் அடங்கியிருந்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.




