இலங்கைக்கு சர்வதேச தபால் பொதிகள் (Courier Services) ஊடாக போதைப்பொருட்கள் கடத்தப்படும் ஓர் ஆபத்தான போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரிகளின் சோதனைகள் மற்றும் கண்காணிப்புகளில் இருந்து தப்புவதற்காக, கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான தபால் பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாத அதிரடி சோதனைகள்: கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சுங்கத் துறை ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 04 போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைகளும், மத்திய தபால் பரிவர்த்தனை நிலைய தபால் பொதிகள் தொடர்பாக 09 சோதனைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம் ஒட்டுமொத்தமாக 83.2 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருட்கள் சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.




