50ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவின் எல்லே போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் திருகோணமலை மாவட்ட அணியை தோற்கடித்து மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக மகளிர் அணி கிழக்கு மாகாண சம்பியனானது.
50ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவின் எல்லே போட்டிகள், சனிக்கிழமை (10) திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
இச்சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. மகளிர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரண்டு இன்னிங்ஸ்களைக் கொண்ட இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
முதல் இன்னிங்ஸில் 30 பந்துகளை எதிர்கொண்ட திருகோணமலை அணி 2 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு அணி 6 ஓட்டங்களைப் பெற்று முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் 30 பந்துகளை எதிர்கொண்ட திருகோணமலை அணி 2 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் வெற்றிபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக மகளிர் அணி, கிழக்கு மாகாண சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ள செங்கலடி கோல்ட் ஸ்டார் மகளிர் அணியினருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




