இலங்கையின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தி, நோயாளிகளுக்கு வினைத்திறனான மற்றும் தரமான சிகிச்சைகளை வழங்கும் நோக்கில், ஆரம்ப சேவைப் பிரிவின் சுகாதாரப் பணியாளர் உதவியாளர் (SKS) பதவிகளுக்கு 436 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
(11) முற்பகல் மருதானை டவர் அரங்க வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பதவிகளுக்காக சுமார் 92,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், தகைமை பெற்ற விண்ணப்பதாரர்கள் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் முற்றிலும் முறையான மற்றும் வெளிப்படையான நடைமுறையின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சுகாதாரப் பணியாளர் உதவியாளர் பதவிகளுக்கு 1,989 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில், பல்வேறு கட்டங்களாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசியல் செல்வாக்குகளுக்கு அப்பால் தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையிலேயே அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என்றும், அரச சேவை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி புதிய நியமனதாரர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.







