மன்னார் மருதமடு திருத்தலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா, நேற்று (06) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நேற்று மாலை 5.30 மணியளவில் புனிதக் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மடு திருத்தலப் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மறைமாவட்டக் குருக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு நவநாள் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான கத்தோலிக்க மற்றும் ஏனைய மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் மடு திருத்தலத்தை நோக்கி வந்த வண்ணமுள்ளனர்.
நேற்று ஆரம்பமான நவநாள் திருப்பலிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும், ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில், ஏனைய மறைமாவட்ட ஆயர்களின் பங்கேற்புடன் திருவிழா கூட்டுத் திருப்பலியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





