நானுஓயா பகுதியில் இன்று சனிக்கிழமை (19.09.2026) காலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் 34 வயதுடைய இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் தற்காலிகமாக வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34) என்பவரே இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவராவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை தனது தொழில் நிமித்தம் நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி ‘ஸ்கூட்டி’ (Scooty) ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பில் வேனைச் செலுத்திய 42 வயதான சாரதி நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







