சமூக ஊடகத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, வழக்கின் முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் மீதான இறுதித் தீர்ப்பு நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளது. இதன்போதே அவருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனோஜனுக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச மற்றும் இராஜதந்திர மட்டத்தில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அனோஜனின் உயிரைப் பாதுகாக்கவும், அவரை சட்டரீதியாக மீட்கவும் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, உணர்ச்சிப்பூர்வமான இந்த விவகாரத்தில் இன, மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலோ அல்லது தூண்டுதலை ஏற்படுத்தும் வகையிலோ சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் கட்சி, மத பேதமின்றி குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான மன மற்றும் சமூக ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




