• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்: 2027க்குள் 4 லட்சம் குடும்பங்களை நீக்க அரசு முடிவு!

அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்: 2027க்குள் 4 லட்சம் குடும்பங்களை நீக்க அரசு முடிவு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்குள் மேலும் 400,000 குடும்பங்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவு அஸ்வெசும கொடுப்பனவை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய குடும்பங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IMF நிபந்தனையும் அரசாங்கத்தின் திட்டமும்:

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ பின்வருமாறு குறிப்பிட்டார்:

  • தற்போதைய மறு ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்திலிருந்து வெளியேறவுள்ளன.
  • 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘மிகவும் ஏழ்மையான’ பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முக்கிய நிபந்தனையாகும்.
  • இதற்குப் பதிலாக, 2030ஆம் ஆண்டிற்குள் இவ்வாறான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கமாகும்.

பொருளியல் பேராசிரியரின் கடும் எச்சரிக்கை:

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பயனாளிகளைக் குறைப்பது பொருத்தமற்றது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம கேள்வி எழுப்பியுள்ளார்.

“பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்களின் வருமானம் ஸ்தம்பித்திருக்கும் நிலையில், விலையேற்றம் காரணமாக 33% க்கும் அதிகமான மக்கள் இன்னும் வறுமையிலேயே வாடுவதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. வெறும் IMF நிபந்தனைகளுக்காக ஏழை மக்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டால், அவர்கள் மிகக் கடுமையான வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.” — பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம

Share the Post: