மன்னார், தாரபுரம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் மிகக் கொடூரமான முறையில் கடத்தப்பட்ட இரண்டு கன்றுகளை மன்னார் பொலிஸார் நேற்று அதிரடியாக மீட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து பொலிஸார் சோதனை இட்டபோதே இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பகுதியில் திருடப்பட்ட இந்தக் கன்றுகள், முச்சக்கர வண்டியின் பயணிகள் அமரும் சிறிய பகுதிக்குள் திணிக்கப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கடத்தப்பட்டுள்ளன.
இரக்கமற்ற முறையில் வெறும் பொருட்களப் போலக் கன்றுகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையிலேயே, பொலிஸார் முச்சக்கர வண்டியை இடைமறித்துக் கன்றுகளைக் காப்பாற்றியுள்ளனர். சட்டவிரோத கால்நடை கடத்தல் மற்றும் விலங்குவதைகளுக்கு எதிராகப் பொலிஸார் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
கன்றுகளைக் கடத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






