சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி “உழைப்பால் அனைவரும் சமம்” என்ற சமத்துவச் சிந்தனையை கட்டியெழுப்பும் நோக்கில், அரசாங்கத்தின் “க்ளீன் ஸ்ரீ லங்கா” கொள்கைத் திட்டத்தின் கீழ் ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இன்று (08) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மாவட்ட பிரதம கணக்காளர் எம். எம். மஃரூப், கணக்காளர் எம். பாரிஸ், உதவி பிரதேச செயலாளர் எம். ஐ. முவஃபிக்கா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. ஏ. ஹமீட், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ. சி. முஹம்மட், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் ஏ. எம். நளீர், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ. சீ. ஏ. நஜீம், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. வி. எம். பஷீர், கலாசார உத்தியோகத்தர் றஸ்மி எம். மூஸா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினர் என பலரும் கலந்துகொண்டனர்.
வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, சாய்ந்தமருது பிரதேசத்தின் கரையோரப் பகுதிகள் மற்றும் தேணாவை அண்டிய சூழல்கள் சுத்தம் செய்யப்பட்டன. அத்துடன், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், பிரதேச செயலாளர் ஆசீக் தலைமையிலான குழுவினரால் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இலங்கையின் பாரம்பரிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் “அத்தம” என்பது பணப் பரிமாற்றமின்றி, கிராமப்புற விவசாய சமூகங்களிடையே நிலவிவரும் இலாப நோக்கற்ற கூட்டு உழைப்புப் பரிமாற்ற முறையைக் குறிப்பதாகும். “க்ளீன் ஸ்ரீ லங்கா” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குத் திட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து, கூட்டு உழைப்பின் மூலம் அதனை வெற்றியாக்குவதற்கான சமூகக் தத்துவமாகவே இந்த ‘அத்தம’ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






