ஹஸ்பர் ஏ எச்
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், எதிர்கால வெற்றியையும் கருத்திற்கொண்டு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் திருகோணமலை கல்வி வலய அதிகாரிகளிடம் இன்று(30) கையளிக்கப்பட்டன.
மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன், திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினால் முன்னெடுக்கப்பட்ட இச்சமூகநலக் கல்விப் பணியின் ஊடாக, குறித்த வினாத்தாள்கள் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் கைலாசபிள்ளை அரவிந்தன் மற்றும் திருக்கோணேஸ்வர ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர், சட்டத்தரணி திலகரெட்னம் துஷ்யந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தின் சமய மற்றும் ஆன்மிகப் பணிகளுக்கு அப்பால், சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்வது முக்கியமான சமூகப் பொறுப்பாகும். அந்த வகையில், பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் தமது அறிவையும் பரீட்சைத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் நோக்கில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம் என்பது அவர்களது தனிப்பட்ட வெற்றிக்கு மட்டுமன்றி, குடும்பங்களின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் அடித்தளமாக அமைகின்றது. இதனை உணர்ந்து, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இத்தகைய முயற்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தனது சமூகப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
“ஆன்மிக வளர்ச்சியுடன் கல்வி வளர்ச்சியும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமானது” என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தகைய பணிகள், மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை ஊக்குவிப்பதுடன், அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்கும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—





