ஹஸ்பர் ஏ எச்
பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் நவீன கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினால் இனங்காணப்பட்ட வளப்பற்றாக்குறை கொண்ட மூன்று பாடசாலைகளுக்கு, மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் திறன்பலகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
தி/தி/கும்புறுபிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, தி/பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் மற்றும் தி/தி/நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கே இத்திறன்பலகைகள் 29.10.2026 அன்று வழங்கப்பட்டன.
இக்கையளிப்பு நிகழ்வுகளில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் கைலாசபிள்ளை அரவிந்தன் மற்றும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் தலைவர், சட்டத்தரணி திலகரெட்னம் துஷ்யந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பின்தங்கிய மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் இத்திட்டம் பாராட்டத்தக்க சமூகப் பணியாகக் கருதப்படுகிறது. கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கி இம்முயற்சிக்கு அனுசரணை வழங்கிய மனித நேய நம்பிக்கை நிதியத்திற்கும், இத்திட்டத்தை முன்னெடுத்த திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைக்கும் கல்விச் சமூகத்தினர் தமது பாராட்டுகளைத் தெரிவிக்கின்றனர்.





