ஹஸ்பர் ஏ எச்
இலங்கையின் மீன்பிடித்துறை கள உத்தியோகத்தர்களுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மீன்பிடி, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் டாக்டர் பி.கே. கொலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மீன்பிடி, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து சிறப்பித்தார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் 265 மில்லியன் இலங்கை ரூபா நிதியுதவியை வழங்கவுள்ளது.

மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களம், இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ச்சி அதிகார சபை (NAQDA), தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கள உத்தியோகத்தர்களுக்கு இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு மீன்பிடித்துறை அதிகாரிகளின் செயற்பாட்டுத் திறன், பணித்திறன் மற்றும் கள மட்டத்திலான சேவைப் பிரசன்னம் ஆகியவற்றை மேம்படுத்தும்.
இதன் மூலம் விரைவான சேவைகளை வழங்குவதற்கும், மீனவ சமூகங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். அத்துடன், இலங்கை முழுவதும் பொதுச் சேவை வழங்கலை மேலும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
மேலும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்டுள்ள ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான இலக்குகளை அடைவதற்கும் இந்த முயற்சி பங்களிப்புச் செய்யும்.

இலங்கை மக்களின் தேவைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியா முன்னெடுத்து வரும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள், நாட்டின் 25 மாவட்டங்களிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, மீன்பிடித்துறை, போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாழ்வாதார மேம்பாடு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் இந்த அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




