• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • 12 கோடி ரூபா கையூட்டல் விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் அதிரடி விசாரணை ஆரம்பம்!

12 கோடி ரூபா கையூட்டல் விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் அதிரடி விசாரணை ஆரம்பம்!

கொழும்பு: பிரபல பாதாள உலகக் குற்றவாளி ஒருவருக்குச் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் (120 மில்லியன்) கையூட்டல் (Bribery) பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷ சம்பந்தப்பெரும சமர்ப்பித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கையூட்டல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவரும் ஏற்கனவே லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும் இத்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக டுபாய்க்குச் சென்றிருந்த காலப்பகுதியில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயில் தங்கியிருந்தமை குடிவரவு குடியகல்வு திணைக்களத் தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் 21-03-2023 முதல் 28-03-2023 வரை டுபாயில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதால், இந்த 12 கோடி ரூபா பணப் பரிமாற்றத்துடன் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஏதேனும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆணைக்குழு தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இவ்விசாரணைகளின் போது, லசந்த மஞ்சுள சில்வா எனப்படும் நபருக்கு மீள வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபாய் பணம், நுகேகொட, நாவல வீதியில் உள்ள விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வைத்தே கைமாறியுள்ளது. குறித்த அந்த வீடு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என்பதும் விசாரணைகளில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Share the Post: