பொலன்னறுவை, அரலகன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளம் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதனையடுத்து, படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அரலகன்வில காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தலைமறைவாக உள்ள சந்தேகநபரைத் தேடி விசேட சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




