வவுனியா, குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று மிக பக்திப் பூர்வமாக நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள் மற்றும் உள்வீதி, வெளிவீதி உலாக்கள் என்பன சிறப்பாக இடம்பெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் அம்மனுக்கு விசேட கும்ப பூசைகளும், கூட்டுப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு, வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ காளி அம்மன் உள்வீதி வழியாக எழுந்தருளித் தேரில் ஆரோகணித்தார்.
அம்பாளின் வருகையைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு, ‘ஆரோகரா’ கோசங்கள் முழங்க தேர்த்திருவிழா ஆரம்பமானது. வவுனியா மாவட்டம் மட்டுமன்றி, இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்துத் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
ஆலயத்தின் வெளிவீதியை அலங்கரித்த வண்ணக் கோலங்கள் மற்றும் தோரணங்களுக்கு மத்தியில், நாதஸ்வர, தவில் மேள வாத்தியங்கள் முழங்க அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் நலன்கருதி ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் மற்றும் அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நாளைய தினம் அம்மனின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









