• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • புத்தளத்தில் கொடூரம்: 20 நாட்கள் வயதான குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்ற தாய் கைது!

புத்தளத்தில் கொடூரம்: 20 நாட்கள் வயதான குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்ற தாய் கைது!

தனது 20 நாட்கள் மட்டுமேயான பச்சிளம் குழந்தையை ஒரு இலட்சம் ரூபா பணத்திற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளம் தாய் ஒருவரும், அக்குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணும் புத்தளம் கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளம, கம்மந்தழுவ பகுதியில் பதிவான சம்பவம் ஒன்று தொடர்பாகக் காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதுரங்குளி, கடையமொட்டை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடமே இந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணின் கணவரால், தாயிடம் 100,000 ரூபா பணம் வழங்கப்பட்டு இந்த கொடுக்கல் வாங்கல் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டுள்ள இளம் தாய் அதிகளவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்பதுடன், இவர்கள் இருவரும் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்பட்ட இயலாமையினாலேயே, குழந்தை பிறந்து சில நாட்களிலேயே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குழந்தையைப் பெற்றுக்கொண்ட பெண்ணிற்குத் திருமணமாகி 18 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தைகள் இருக்கவில்லை என காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, குறித்த தம்பதியினர் இந்த கர்ப்பிணிப் பெண்ணுடன் முன்கூட்டியே பேசி, குழந்தை பிரசவித்ததும் உடன்பட்ட தொகையைச் செலுத்தி குழந்தையைத் தங்களது பொறுப்பில் எடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த குழந்தை பரிமாற்றமானது இலங்கையின் சட்டப்படி நீதிமன்றினூடாக அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ தத்தெடுப்பு நடைமுறைகளுக்கு முற்றிலும் புறம்பாக, சட்டவிரோதமான முறையில் நடந்துள்ளதாக காவற்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய, குழந்தையின் உண்மையான தாய், குழந்தையை வாங்கிய பெண் மற்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினரும் காவற்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: