• Home
  • விளையாட்டு செய்திகள்
  • கல்முனை சாஹிரா மைதானத்தில் அனல் பறந்த ஹேண்ட்போல் தொடர்: இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி அணி சாம்பியன்!

கல்முனை சாஹிரா மைதானத்தில் அனல் பறந்த ஹேண்ட்போல் தொடர்: இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி அணி சாம்பியன்!

அம்பாறை மாவட்ட மட்டத்திலான ஹேண்ட்போல் (Handball) விளையாட்டுப் போட்டிகள் கல்முனை சாஹிரா கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றன. மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொடரில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி சாம்பியன் பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி, பலம் வாய்ந்த சாய்ந்தமருது பிரதேச செயலக அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் விறுவிறுப்பாக மோதிய இந்த ஆட்டத்தில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெஹியத்தகண்டி அணி வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி, காரைதீவு பிரதேச செயலக அணியுடன் மோதுகண்டது. வீராங்கனைகளின் நேர்த்தியான பந்துப் பரிமாற்றங்கள் மற்றும் சாதுரியமான வியூகங்கள் மூலம் காரைதீவு அணியை வீழ்த்தி தெஹியத்தகண்டி மகளிர் அணி மகுடம் சூடியது.

இப்போட்டிகளில் இரட்டைச் சாம்பியன் பட்டங்களை வென்றதன் மூலம், தெஹியத்தகண்டி பிரதேச செயலகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளன.

வெற்றி வாகை சூடி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த தெஹியத்தகண்டி பிரதேச செயலக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share the Post: