முறையான இந்தியக் குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத் தேர்தலில் வாக்களித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தம்பதியினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவரும், அவரது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் (டி. நகர்) பகுதியில் தங்கியிருந்து வசித்து வந்துள்ளனர். இவர்கள் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் எதுவும் இல்லாத நிலையில், போலியான முகவரி ஆதாரங்களைச் சமர்ப்பித்து இந்திய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சட்டவிரோதமாகச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இத்தம்பதியினர் தங்களது வாக்காளர் அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். இந்தியக் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களித்திருப்பது குறித்துச் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், அவர்கள் இருவரும் முறையான ஆவணங்கள் இன்றி போலி அடையாள அட்டைகளைப் பெற்றதும், அதன் மூலம் தேர்தலில் வாக்களித்ததும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் சென்னையிலிருந்து மீண்டும் இலங்கை திரும்புவதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு அவர்களின் கடவுச்சீட்டு (Passport) மற்றும் ஆவணங்களை குடிவரவுத் துறை அதிகாரிகள் சோதித்தபோது, அவர்கள் தேடப்பட்டு வந்த நபர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள், தம்பதியினர் இருவரையும் தடுத்து வைத்துக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து சென்னை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




