• Home
  • உள்ளூர் செய்திகள்
  • யாழ். பல்கலைக்கழகத்தில் முல்லைத்தீவு மாணவியின் ‘அயம்’ கவிதை நூல் வெளியீடு!

யாழ். பல்கலைக்கழகத்தில் முல்லைத்தீவு மாணவியின் ‘அயம்’ கவிதை நூல் வெளியீடு!

யாழ்/ பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீடத்தின், மனிதவள முகாமைத்துவத் துறையின் தலைவர் கலாநிதி ஆறுமுகம் சரவணபவன் தலைமை தாங்கிய மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக, முகாமைத்துவ வணிக பீடத்தின் உபபீடாதிபதி பேராசிரியர் பி.பிரதீப்காந் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக.. மூத்த கவிஞர் அமர்சிங்கம் கேதீஸ்வரன், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் க.கிருஷ்ணமூர்த்தி, சந்தக்கவிஞர் முல்லைத்தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக.. நடன ஆசிரியர் திருமதி கிருபா ஜெய்க்குமார், ஓய்வு நிலை வாத்தியப் பொறுப்பாளர் திரு அண்ணாமலை செல்வத்தினம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன் யோகராசா துசாந்தன், மாணவர் ஒன்றியப் பொருளாளர் செல்வன் கண்ணதாஸ் சுடரோன், முகாமைத்துவ வணிக பீடத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன் சந்திரகுமார் செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்மொழி வாழ்த்தினை, செல்வன் கிரிதர்சர்மா சந்திரசேகர், செல்வி இளங்கோவன் விஷாந்தினி என்போர் இசைத்தனர்.வரவேற்புரையினை முகாமைத்துவபீட மாணவி செல்வி அருட்கவி அருட்செல்வன் நிகழ்த்த, அறிமுக உரையினை நிதியியற்றுறை மாணவி செல்வி ஸேவிதா சந்திரகுமார் நிகழ்த்தினார்.கிளிநொச்சி, ஜேந்திநகர் சிறி மீனாட்சி கலை நர்த்தனாலயத்தின் மாணவிகளது, அன்புருகி அரங்கதிர்ந்த வரவேற்பு நடனம் பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.கூடவே மேடையில், பெருந்திரளானோர் முன்னிலையில், நூலாசிரியரை வளர்த்தெடுத்த அவரது அத்தையும் மாமாவும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, நூலாசிரியரை அவரது நண்பர்களும் நினைவுப்பரிசிலினை வழங்கி பொன்னாடை போர்த்துக் கௌரவித்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர் உரை மற்றும் பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து, நூலாசிரியரின் ஏற்புரையுடன்கூடிய நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு கண்டது.

நிகழ்வுகள் அனைத்தையும், ஆனையிறவு தேசிய உப்பு நிறுவனத்தின், உதவி முகாமையாளர் செல்வி கேசிகா சாம்பசிவம் அவர்கள் சுவைபட தொகுத்து வழங்கியிருந்தார்.

முகாமைத்துவ வணிகபீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நூலாசிரியரின் உயர்தர ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் கவிஞர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை, நிகழ்வை மேலும் கனதியாக்கியிருந்தது

Share the Post: