கல்முனை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் சைவசமய ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட மிகப்பழைமை வாய்ந்த ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனருத்தாரண (மறுசீரமைப்பு) வேலைகள் தற்போது மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆலய புனரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் அவர்கள், வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் அவர்களுடன் இணைந்து அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திருப்பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள், தங்களின் மனக்குறைகளை விடுத்து, மன அமைதியையும் அருளையும் பெறும் ஒரு ஆன்மீகத் தலமாக இவ்வாலயம் விளங்கி வருகின்றது. அத்துடன், இப்பிரதேச இந்து மக்களின் ஒரு முக்கிய ஆன்மீக அடையாளமாகவும் இது கருதப்படுகிறது.
தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் அடுத்த வருடம் மிகச் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.









