ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் சமூக ஊடகங்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வுச் செயலமர்வொன்று அண்மையில் திருகோணமலை, உப்புவெளியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் “எனது இணையம் – எனது உரிமை” எனும் தொனிப்பொருளில் இந்த ஒருநாள் விழிப்புணர்வுச் செயலமர்வு நடத்தப்பட்டது.
இச்செயலமர்வில் பிரதேச ஊடகவியலாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான மிக முக்கியமான விடயங்கள் குறித்துத் தெளிவூட்டப்பட்டது.
குறிப்பாக, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள், சட்ட விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம், இணையவழி மோசடிகளில் இருந்து தப்புதல் மற்றும் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அதிகார மட்டத்திற்கும் பொதுவெளிக்கும் கொண்டு செல்வது தொடர்பிலும், விளிம்புநிலை மக்களின் உரிமைப் போராட்டங்களில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கங்கள் குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வலிமைப்படுத்த சமூக ஊடகங்களைப் பொறுப்புடனும் திறம்படவும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இச்செயலமர்வு சிறந்ததொரு வழிகாட்டியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.







