• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சம்மாந்துறையில் புதிய விவசாய வீதி திறப்பு! பாதுகாப்பான நெல் களஞ்சியசாலை அமைக்க பி.ச. பிரதிநிதி நபாஸ் வலியுறுத்தல்!

சம்மாந்துறையில் புதிய விவசாய வீதி திறப்பு! பாதுகாப்பான நெல் களஞ்சியசாலை அமைக்க பி.ச. பிரதிநிதி நபாஸ் வலியுறுத்தல்!

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்காகப் பாதுகாப்பான களஞ்சியசாலையை உடனடியாகக் கட்டுவதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான வை.பீ.எம். நபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்மாந்துறை நெல்லுச் சேனைக் கண்டம் விவசாயிகளின் நீண்டகாலப் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய கிழக்கு மாகாண விவசாய வீதி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. டீ.எம்.எஸ்.பீ. திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் ஜனாப் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ். ரினோஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் திரு. எஸ். பரமேஸ்வரன் வழிகாட்டலிலும், சம்மாந்துறை கிழக்கு விவசாயப் போதனாசிரியர் திரு. ஏ.எச்.பீ. ராஜ கருணா ஏற்பாட்டிலும் சிறப்பாக நடைபெற்றது.

“விவசாயிகளின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு அதிகாரிகள் சம்மாந்துறை விவசாயப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சிறு தொழில்கள் மற்றும் விவசாய அபிவிருத்திக்காக உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் மானிய அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அரசாங்கம் உயர்த்தியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். அதேபோன்று, இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் குறைந்தது 25 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் விளைச்சலைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான நவீன களஞ்சியசாலை வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும்.”

மாவட்ட மற்றும் பிரதேச விவசாய அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்ட அவர், இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் விவசாயப் போதனாசிரியர்களும், கடும் சிரமங்களுக்கு மத்தியில் நாட்டின் உணவத்தேவையை நிவர்த்தி செய்யும் விவசாயிகளும் சமூகத்தின் உயரிய மரியாதைக்கு உரியவர்கள் என்றும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

Share the Post: