இலங்கையில் ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், சட்டவிரோதமாகப் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோது தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைப் பகுதியில் இலங்கையிலிருந்து வந்த கள்ளப் படகில் இருந்து இருவர் இறங்குவதாக இந்தியக் கடலோரக் காவல் குழுமப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட தீவிர சோதன நடவடிக்கையின் போது குறித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இராமேஸ்வரம் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இலங்கையின் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து கள்ளப் படகு ஒன்றின் மூலமாக இந்தியாவிற்குப் புறப்பட்டதாகவும், இதற்காக நபர் ஒருவருக்குச் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பணமாகச் செலுத்தி தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாகவும் அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் குறித்த விபரங்களைச் சரிபார்த்தனர்.
அதன்போது, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக இலங்கையில் ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் மற்றும் பல்வேறு தீவிர குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் இந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




