• Home
  • உலகச் செய்திகள்
  • நீட் தேர்வு போராட்ட களத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக அரண் அமைத்து உலகளவில் கவனம்

நீட் தேர்வு போராட்ட களத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக அரண் அமைத்து உலகளவில் கவனம்

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் போராட்டக் களங்களில், மாணவிகளும் இளம் பெண்களும் முன்வரிசையில் நின்று காட்டி வரும் வீரம் மற்றும் துணிச்சல் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் முதல் சென்னை, மும்பை என நாட்டின் பல்வேறு முதன்மை நகரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டங்களின் போது அடக்குமுறைகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு அஞ்சாது, சக ஆண் போராளிகளுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாகப் பெண்கள் கைகோர்த்து மனித அரண் (Human Shield) அமைத்து நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச செய்திகளிலும் வைரலாகி வருகின்றன.

போராட்டக் களத்தில் கைது நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் தடியடிகள் இடம்பெற்றபோது, அஞ்சாமல் கைகளை விரித்துப் பிடித்து, சக மாணவர்களைப் பாதுகாத்த இளம் பெண்களின் புகைப்படங்களும் காணொளிகளும் ‘பெண் சக்தியின்’ அடையாளமாக மாறியுள்ளன.

சமூகத்தில் நிலவும் கல்விச் சுரண்டல்கள் மற்றும் அடக்குமுறைகளை பிடுங்கி எறியும் நோக்கில், Gen-Z தலைமுறையைச் சேர்ந்த மாணவிகள் காட்டி வரும் இந்தத் தீவிர வீரம், போராட்டக் களத்திற்குப் புதிய ஆற்றலை வழங்கியுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தையும் நாட்டின் கல்வி உரிமையையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘கல்வி உரிமை என்பது அனைவருக்குமானது’ என்ற முழக்கத்துடன், களத்தில் உறுதியோடு நிற்கும் பெண்களின் இந்த எழுச்சி, போராட்டத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Share the Post: