புத்தளம்: மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, அழிக்க உத்தரவிடப்பட்டிருந்த 99 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று (25) காலை பலத்த பாதுகாப்புடன் அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன.
நீதிமன்றத்தில் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்படவுள்ளன.
இப்போதைப்பொருட்கள் அனைத்தும் புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள தகன உலையில் (Incinerator) தீயிட்டு முழுமையாக அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் நேரடி அனுமதியுடனும், நீதிவான், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பிற்கு மத்தியிலும் இந்நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








