மண்முனை தென்மேற்கு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க. பிரபு தலைமையில் நேற்று (28.08.2026) நடைபெற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
- சட்டவிரோத மண் அகழ்வு: பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாக நிறுத்தக் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- ஆற்றங்கரை பாதுகாப்பு: கடுகாமுனை – கொக்கட்டிச்சோலை ஆற்றங்கரைகளின் ஆற்றுக்கட்டைகளை புனரமைத்து வலுப்படுத்துதல்.
- வீதி அபிவிருத்தி: கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை வீதி மற்றும் வில்லுக்குளம் வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துதல்.
- குடிநீர் விநியோகம்: விடுதிக்கல், மாவடிமுன்மாரி மற்றும் முதலைக்குடா மேற்கு பாடசாலை வீதிப் பகுதிகளுக்கான குடிநீர் வசதிகளை விரிவுபடுத்துதல்.
- விவசாயிகள் நலன்: அரசாங்கத்தின் நெல் கொள்வனவை முறைப்படி தொடர்வதோடு, விளைச்சலுக்கு உரிய நியாயமான விலையை உறுதி செய்தல்.
- மீனவர் மேம்பாடு: அம்பிளாந்துறை மீனவர்களுக்கான சங்கக் கட்டிடம் மற்றும் பாதை இறங்குதுறையில் மலசலகூட வசதிகளை அமைத்துக் கொடுத்தல்.
- காணி & ஆலயப் பணிகள்: கெவுளியாமடு மேய்ச்சல் தரை மற்றும் வனவள திணைக்களக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், தாந்தாமலை முருகன் ஆலய கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அனுமதியை துரிதப்படுத்துதல்.

அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்தாய்வின் அடிப்படையில், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணத் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டது.
Views: 113



