• Home
  • உலகச் செய்திகள்
  • நியூசிலாந்தில் வாகன ஓடோமீற்றர் மோசடி: இலங்கையரின் நிறுவனத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தண்டனை!

நியூசிலாந்தில் வாகன ஓடோமீற்றர் மோசடி: இலங்கையரின் நிறுவனத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தண்டனை!

நியூசிலாந்து வரலாற்றில் முதல்முறையாக, வாகனத்தின் ஓட்ட அளவைக் காட்டும் ஓடோமீற்றர் (Odometer) கணிப்பீட்டை மாற்றி மோசடி செய்த வழக்கில், இலங்கையர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் கார் விற்பனை நிறுவனத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடித் தண்டனை வழங்கியுள்ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் இயங்கி வரும் ‘Carporium’ (Sachis Holdings Ltd) என்ற கார் விற்பனை நிறுவனம், கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக சொகுசு கார் ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. எனினும், அந்த வாகனத்தின் உண்மையான ஓட்ட அளவு மறைக்கப்பட்டு, வாடிக்கையாளர் ஏமாற்றப்பட்டமை பின்னர் கண்டறியப்பட்டது.

குறித்த வாகனம் ஏலத்தில் எடுக்கப்பட்ட போது 150,031 கிலோமீற்றர் ஓடியிருந்த போதிலும், அதனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யும் போது வெறும் 119,244 கிலோமீற்றர் மட்டுமே ஓடியதாக ஓடோமீற்றர் கணிப்பீடு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 30,000க்கும் அதிகமான கிலோமீற்றர் தூரத்தைக் குறைத்து அவர்கள் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வாடிக்கையாளர் தனது வாகனத்தை சாதாரண பராமரிப்பு சேவைக்காக (Service) கொண்டு சென்ற போதே இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த நியூசிலாந்து நீதிமன்றம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்திற்கு பின்வரும் அதிரடி உத்தரவுகளையும் தண்டனைகளையும் விதித்துள்ளது:

  • மோசடியாக விற்பனை செய்யப்பட்ட காரை, வாடிக்கையாளரிடமிருந்து அதே முழுத் தொகைக்கு (NZ$ 24,000) நிறுவனமே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்.
  • நுகர்வோரை ஏமாற்றிய குற்றத்திற்காக நிறுவனத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
  • பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 1,000 நியூசிலாந்து டொலர்கள் நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டும்.

நுகர்வோரை ஏமாற்றும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் மோசடிச் செயல்கள் நியூசிலாந்தில் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படாது என அந்நாட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share the Post: