• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மதவாச்சியில் விசித்திர நோய் பரவல்: ஒரே நாளில் 40 எருமைகள் உயிரிழப்பு – 2 கோடி ரூபாய் நஷ்டம்!

மதவாச்சியில் விசித்திர நோய் பரவல்: ஒரே நாளில் 40 எருமைகள் உயிரிழப்பு – 2 கோடி ரூபாய் நஷ்டம்!

மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறிய குளம் கிராமத்தில் உள்ள எருமைப் பண்ணை ஒன்றில் அடையாளம் காணப்படாத விசித்திர நோய் பரவியதன் காரணமாக, ஒரே நாளில் சுமார் 40 எருமைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

குறித்த பண்ணையின் உரிமையாளரான தாரக சங்கீத் என்பவருக்குச் சொந்தமான 150 எருமைகளில், கடந்த 02ஆம் திகதி மாலை முதல் 03ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் இரு தொழுவங்களில் இருந்த 40 எருமைகள் திடீரென நிலத்தில் விழுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளன. இந்நடவடிக்கையினால் தமக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகப் பண்ணையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த மதவாச்சி கால்நடை மருத்துவ அதிகாரி அலுவலகக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஏனைய எருமைகளுக்கு ஊசி மருந்துகளைச் செலுத்தியுள்ளதுடன், பண்ணையிலிருந்து விலங்குகளை வெளியே கொண்டு செல்லத் தடையும் விதித்துள்ளனர். உயிரிழந்த எருமைகளின் இரத்த மாதிரிகள் மற்றும் குருத்தெலும்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேலதிக ஆய்வகப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே நோய்க்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share the Post: