இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) வாழைச்சேனை டிப்போவில் காணப்படும் அத்தியாவசிய வளப் பற்றாக்குறைகள் மற்றும் அபிவிருத்திப் தேவைகள் குறித்து நேரில் கேட்டறிவதற்காக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, டிப்போவின் தற்போதைய செயற்பாடுகள், ஊழியர்களின் சவால்கள் மற்றும் பயணிகள் சேவைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் நிர்வாகிகளுடனும் ஊழியர்களுடனும் அவர் விரிவாகக் கலந்துரையாடினார்.
- ஊழியர் பற்றாக்குறை: சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க உடனடியாக குறைந்தபட்சம் 5 பேருந்து சாரதிகளை நியமித்தல்.
- இயந்திர மற்றும் தொழில்நுட்பக் கருவிகள்: பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க 5 எஞ்சின்கள், அவசர பழுதுபார்ப்பிற்கான கருவிப் பெட்டிகள் (Toolkits), உயர் அழுத்தத் துப்புரவு இயந்திரம் (High-Pressure Washer) மற்றும் தடையற்ற மின்சாரத்திற்கு மின்பிறப்பாக்கி (Generator) வழங்குதல்.
- அபிவிருத்தி மற்றும் புதிய சேவைகள்: டிப்போவின் உட்புற வீதிகளைப் புனரமைத்தல் மற்றும் பாசிக்குடா வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பிரத்தியேக ஏசி (AC) பேருந்து சேவை ஒன்றை ஆரம்பித்தல்.
வாழைச்சேனை டிப்போ எதிர்கொள்ளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய உடனடித் தேவைகளைக் கருத்திற்கொண்டு, முன்வைக்கப்பட்ட அத்தியாவசியக் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித் தருமாறு கோரி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தனது உத்தியோகபூர்வ கடிதத்தைக் கையளித்துள்ளார்.






