• Home
  • உள்ளூர் செய்திகள்
  • வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் வண்டி – சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு: விசேட அதிரடிப்படை சாரதி கைது

வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் வண்டி – சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு: விசேட அதிரடிப்படை சாரதி கைது

(கனகராஜா சரவணன்)

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பருத்திச்சேனை சந்தியில், சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் விசேட அதிரடிப்படை சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

கன்னங்குடா, புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபிள்ளை (அல்லது கிருஷ்ணபாலன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமிற்குச் சம்பவ தினமான சனிக்கிழமை இரவு ஜீப் வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது, பருத்திச்சேனை சந்தியில் எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டியைச் செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

படம் :- AI ல் உருவாக்கப்பட்டது

Share the Post: