• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மூன்று தசாப்த கால அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் கியாஸ் ஷாபிக்கு ‘கோணா தொட்ட’ வாழ்நாள் சாதனையாளர் விருது!

மூன்று தசாப்த கால அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் கியாஸ் ஷாபிக்கு ‘கோணா தொட்ட’ வாழ்நாள் சாதனையாளர் விருது!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையில் ஆற்றிய ஒப்பற்ற மக்கள் சேவையினைப் பாராட்டி, சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘Trinco Plus’ செய்தி ஆசிரியருமான கியாஸ் ஷாபி அவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய ‘கோணா தொட்ட’ ஊடக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகைப் பேரவையில் (Sri Lanka Press Institute) பதிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமை (04.07.2026) நடைபெற்ற விசேட விழாவின் போதே இவ் விருது வழங்கி வைக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற BBC ஊடக யாப்பாவான்கள் இருவரோடு, திருகோணமலை மாவட்டத்திலிருந்து கியாஸ் ஷாபி அவர்களும் இந்த உயரிய விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை ஒட்டுமொத்த பிராந்திய ஊடகத்துறைக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்தது.

பத்திரிகை உலகிலிருந்து தொலைக்காட்சி வரை ஒரு வரலாற்றுப் பயணம்:

1990களில் அமரர் எஸ். டி. சிவநாயகம் அவர்களின் வழிகாட்டலில் ‘தினபதி’, ‘சிந்தாமணி’ ஆகிய தேசிய நாளிதழ்கள் மூலம் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய கியாஸ் ஷாபி, பின்னர் ‘விடிவெள்ளி’, ‘சுடரொளி’, ‘மெட்ரோ நியூஸ்’ ‘தமிழன்’ ஆகிய பத்திரிகைகளில் மக்கள் பிரச்சினைகளை ஓங்கி ஒலித்தார்.

குறிப்பாக, ‘விடிவெள்ளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ‘தினகரன்’, ‘தினகரன் வாரமஞ்சரி’ ஆகியவற்றின் பிரதம ஆசிரியராக இருந்த குணராசா மற்றும் தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அண்ணன் சிவா ராமசாமி ஆகியோரின் ஆதரவுடன் பல காத்திரமான கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதி சமூக மாற்றத்திற்கு வித்திட்டார்.

அச்சு ஊடகத்தில் கோலோச்சிய இவர், 2024 ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் ஊடகத்துறையில் கால்பதித்து, தற்போது ITN, வசந்தம் TV மற்றும் வசந்தம் FM ஆகியவற்றின் பிராந்தியச் செய்தியாளராகவும் மிகச் சிறப்பாகக் கடமையாற்றி வருகின்றார்.

கல்வித் துறையில் மாபெரும் புரட்சி:

ஊடகத்துறையில் தான் பெற்ற பரந்த அனுபவத்தைக் கொண்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு கிண்ணியா பிராந்தியத்தில் முதன்முறையாக உயர்தர மாணவர்களுக்காக ‘தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்’ (Communication and Media Studies) என்ற பாடத்தை இவர் அறிமுகப்படுத்தினார்.

இதன் விளைவாக, இன்று கிண்ணியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி இருப்பது இவரது ஊடக பணிக்குக் கிடைத்த மற்றுமொரு சான்றாகும்.

நெகிழ்ச்சியுடன் நன்றியறிவிப்பு:

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அங்கீகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கியாஸ் ஷாபி,

“எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனது 30 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த இந்த பொக்கிஷத்தை சமூகத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த உயரிய தருணத்தில், எனது மறைந்த தந்தை, மறைந்த ஆசிரியர்கள் மற்றும் எனக்கு களம் அமைத்துத் தந்த பத்திரிகை நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களை நன்றியோடு நினைவு கூர்வதுடன், தற்போது உயிருடன் வாழும் எனது ஆசிரியர்களின் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கின்றேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சமூகத்தின் கண்ணாடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒலிக்கும் கியாஸ் ஷாபி அவர்களுக்கு, இந்த விருது கிடைத்தமை மிகத் தகுதியானது எனப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Share the Post: