முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும் முன்னாள் முதன்மை பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட – கிருலப்பனை, பூர்வாராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து, சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுக்கான காரணம்:
‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) தொண்டு நிறுவனத்தின் கணக்குகள் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாயைப் பெற்று துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தமை தொடர்பாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.




