ஹஸ்பர் ஏ எச்
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக, “புதிய தொழில்நுட்பத்துடன் முதியோர்” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில், சாலியபுர முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (07) நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுதொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முதியோர்களும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமது அன்றாட வாழ்க்கையை மேலும் இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது முதியோர்களுக்கான தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன், அவர்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
முதியோர்களின் பங்களிப்பு, அனுபவம் மற்றும் சமூகத்திற்கான அவர்களின் சேவைகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்களை வலியுறுத்தும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் முதியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், அவர்களின் திறமைகளையும் கலை ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. பாடல், நடனம், கவிதை, பாரம்பரிய கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் முதியோர்களால் வழங்கப்பட்டு, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
இதன்போது முதியோர்களின் உடல் மற்றும் மனநலம், சமூகத்தில் அவர்களுக்கான உரிய இடம், குடும்ப மற்றும் சமூக உறவுகளின் முக்கியத்துவம், முதியோர் நலன்களை மேம்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
முதியோர்கள் சமூகத்தின் அனுபவச் செல்வமாக விளங்குகின்றனர் என்பதையும், அவர்களின் அறிவு மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வு முதியோர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதுடன், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைந்தது.







