2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிண்ணியா பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை மற்றும் இரண்டு பாடசாலைகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்கள் இன்று (07) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்ட உபகரணங்களின் விபரம்:
- கிண்ணியா வைத்தியசாலை: சிறுநீரக நோயாளர்களுக்கான சுத்திகரிப்பு படுக்கை (Dialysis Bed) மற்றும் குளிரூட்டி (A/C) இயந்திரங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள்.
- பாடசாலைகள்: கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயம் மற்றும் கிண்ணியா அபூபக்கர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் நிர்வாகத் தேவைகளுக்கான அலுவலகத் தளபாடங்கள்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எம். எச். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக் மற்றும் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உபகரணங்களைக் கையளித்தனர்.

இந்நிகழ்வில் வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.





