ஹஸ்பர் ஏ எச்
இலங்கையின் சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வில், இலங்கை அரசாங்கத்திடம் அத்தியாவசிய காசநோய் (TB) எதிர்ப்பு மருந்துகளை இந்திய அரசாங்கம் கையளித்தது. இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள், இந்த மருந்துத் தொகுதியை இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களிடம் கையளித்தார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
2. இலங்கையில் அத்தியாவசிய காசநோய் எதிர்ப்பு மருந்துகள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உதவி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் ஆதரவுடன் பெறப்பட்டன.
3. இந்த மருந்துத் தொகுதியில் சுமார் 3 தொன் எடையுள்ள அத்தியாவசிய காசநோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கியுள்ளன. இதில் 15 இலட்சத்திற்கும் அதிகமான மாத்திரைகள் உள்ளதுடன், அவற்றின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 5.2 கோடி இலங்கை ரூபாய் ஆகும். காசநோய்க்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய முதன்மை நிலை மருந்துகளும் இதில் அடங்குகின்றன. இதன் மூலம் இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்ச்சியாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்ய உதவும்.
4. இந்த உதவியானது, இலங்கையின் பொது சுகாதாரத் தேவைகளுக்கு இந்தியா உரிய நேரத்தில் பதிலளித்து வருவதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகும். 2026 ஆகஸ்ட் மாதத்தில், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்தியா 500 லீற்றர் தொழில்நுட்ப மலத்தியானையும் (Technical Malathion) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது.
5. இந்தியாவும் இலங்கையும் சுகாதாரத் துறையில் நீண்டகாலமாகவும் பரந்தளவிலும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இந்தத் துறையில் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வசதிகளை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குதல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவசரநிலைகள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளின் போதும் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது.
6. இந்தியாவின் அண்மைய உதவியானது, இலங்கை அரசாங்கமும் மக்களும் அடையாளம் காணும் முன்னுரிமைகளுக்கு பதிலளிப்பதில் கவனம் செலுத்தும், இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கையால் வழிநடத்தப்படும், மக்களை மையமாகக் கொண்ட இலங்கையுடனான அபிவிருத்தி கூட்டாண்மைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.






