அரசு வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்சவை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) கம்பஹா பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் முறையற்ற நிதிப் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்துமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்குப் பணித்துள்ளார்.




