அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வி குறித்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது ஆழ்ந்த ஏமாற்றத்தையும், அதேவேளை அணியினருக்கான பாராட்டுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கென்சிங்டன் அரண்மனை ஊடாக இளவரசர் வில்லியம் (W) வெளியிட்டுள்ள தனிப்பட்ட எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது (Gutted). இங்கிலாந்து அணியினரே, நீங்கள் உங்களின் முழுப் பங்களிப்பையும் வழங்கியுள்ளீர்கள். உங்களை நினைத்து நாம் அனைவரும் பெருமையடைகிறோம். உலகக் கிண்ணத் தொடர் முழுவதும் நீங்கள் வெளிப்படுத்திய போராட்ட குணமும் நம்பிக்கையும் எங்கள் அனைவருக்கும் பெரும் ஊக்கமாக அமைந்தது. ஒரு தொடரில் விளையாடிய மிக முழுமையான இங்கிலாந்து அணி இதுவேயாகும். உங்களது தலைகளை நிமிர்த்தி கம்பீரமாக நில்லுங்கள்!”
இதேவேளை, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தனது எக்ஸ் பக்கத்தில் இங்கிலாந்து அணியின் முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்:
“விளைவு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இன்று நாம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த இங்கிலாந்து அணி தங்களின் முழு ஆற்றலையும் மைதானத்தில் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் சின்னத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் காட்டிய ஆட்டத்திறனும், ஆர்வமும் நம் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.”
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அந்தோனி கார்டன் 55ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்திய போதிலும், அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் 85ஆவது நிமிடத்திலும், கூடுதல் நேரத்தில் (90+2′) லாடாரோ மார்டினெஸும் கோல்களை அடித்து இங்கிலாந்தின் 60 ஆண்டுகால உலகக் கிண்ணக் கனவைத் தகர்த்தனர். இதன் மூலம் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




