• Home
  • உள்ளூர் செய்திகள்
  • முதியோர் உதவித்தொகை: அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக அரசாங்கத்தின் விசேட திட்டம் ஆரம்பம்!

முதியோர் உதவித்தொகை: அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக அரசாங்கத்தின் விசேட திட்டம் ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசாங்கத்தின் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள முதியவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபா உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ள போதிலும், தகுதியுடையவர்களில் சுமார் 76,716 பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் இந்த நிதியுதவியைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே இந்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத முதியவர்கள், உடனடியாகத் தமது கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளுமாறு தேசிய முதியோர் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களை விரைவில் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக, மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், சமூக சக்தி அமைப்புகள் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுக்களின் ஊடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள அனைத்து முதியவர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share the Post: