அறிவு, திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு உயர்கல்வி துறையின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வலுப்படுத்தல் மிகவும் அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் (IIESL) 48 ஆவது வருடாந்த அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய அபிவிருத்தியில் பொறியியல் வல்லுநர்கள் ஆற்றும் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், பொறியியல் துறையில் சர்வதேச அங்கீகாரத்தை விரிவுபடுத்துவது நாட்டின் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கும் திறமையான தொழில்நுட்ப நிபுணர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இன்றியமையாதது என வலியுறுத்தினார்.
மேலும், உயர்கல்வியை தேசிய முன்னுரிமையாகக் கொண்டு, மாணவர்கள் தங்கள் அறிவையும் திறன்களையும் மேம்படுத்தி நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ள பங்களிப்பை வழங்கக்கூடிய கல்வி அமைப்பை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தொழில்சார் அமைப்புகள் மற்றும் கைத்தொழில் துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படும் போது மட்டுமே தேசிய முன்னேற்றத்தை அடைய முடியும் என பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.







