கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களால் மாதம்தோறும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் குறைகேள் சந்திப்பின் ஒரு அங்கமாக, வாகரை, பால்சேனை மற்றும் நாகபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்று கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.சுவேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ( 23.08.2026 ) நேற்றைய தினம் இடம்பெற்றது.
இக் குறைகேள் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் அப்பகுதி மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்தார்.
இதன் போது நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், தேன் சேகரிப்பாளர்கள் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் தமக்குத் தொடர்ச்சியாக நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டினர்.
இதனால் தமது அன்றாட வாழ்வாதாரத் தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக்கொண்டு வந்தனர்.
பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், அடுத்து நடைபெறவுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு முன்னதாக, இப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் ஆவணங்களை எழுத்துமூலமான கோரிக்கைகளாக தம்மிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசியதுடன், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வுகளைப் பெற்றுத்தரத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் திரு.சுவேந்திரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான திரு.த.பிரபாகரன், திரு.கா.நாகேந்திரன், தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று வடக்கு பிரதேசக் கிளை உப தலைவர் திரு. ஜெபஸ்ரன், சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள், மீனவர்கள், தேன் சேகரிப்பாளர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.







