• Home
  • உள்ளூர் செய்திகள்
  • அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ. 6.68 இலட்சம் அபராதம்!

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ. 6.68 இலட்சம் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மொத்தம் 668,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளைத் தொடர்ந்து, நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட விவரங்கள்:

120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்த உணவகம் மற்றும் மதுபான விற்பனையகத்திற்கு ரூ. 300,000 அபராதம் விதிக்கப்பட்டது. அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு சோடா போத்தலை விற்பனை செய்த உணவகத்திற்கு ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையான 255 ரூபாயை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ. 268,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர், அவற்றின் அச்சிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் போது ஆதாரமாகப் பயன்படுத்துவதற்குப் பற்றுச்சீட்டுகளைப் (Bills) பெற்றுப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வேலை நேரங்களில் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது

Share the Post: